கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சினிமா வட்டாரத்தைக் கலக்கி வரும் நடிகர் விஜயகுமாரின் குடும்ப பிரச்னை நாளுக்கு நாள் வலுத்து கொண்டே போகிறது. இந்நிலையில் விஜயகுமார் குறித்த ரகசியங்களை புத்தமாக வெளியிடுவேன் என்று நடிகை வனிதா கூறியுள்ளார்.
நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவின் மகள் வனிதா விஜயகுமார் (30). இவருக்கும், நடிகர் விஜயகுமாருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக இருவரும் மதுரவாயல் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார், விஜயகுமார் அளித்த புகாரின் மீது வழக்கு பதிந்து, வனிதா விஜயகுமாரின் இரண்டாவது கணவர் ஆனந்தராஜனை கைது செய்தனர். இதை எதிர்த்து, டி.ஜி.பி.,யிடம் வனிதா புகார் அளித்தார்.
வனிதா கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிந்து, விஜயகுமார், மஞ்சுளா மற்றும் விஜயகுமாரின் முதல் மனைவியின் மகனும், நடிகருமான அருண் விஜய் ஆகியோரை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், விஜயகுமார், மஞ்சுளா ஆகியோர் ஐதராபாத்திலும், அருண் விஜய் அமெரிக்காவிலும் இருப்பதாக கூறப்படுகிறது. இருவர் கொடுத்த புகார் குறித்த வழக்குகள், புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்து வனிதா விஜயகுமார் தினசரி ஒரு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். நேற்று முன்தினம், புறநகர் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்ற வனிதா, கமிஷனரை சந்தித்து புகார் குறித்து விளக்கினார். இந்நிலையில், நேற்று காலை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு, தன் கணவர் ஆனந்தராஜனுடன் திடீரென வந்த வனிதா, கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து, அருண் விஜய் மீது புகார் அளித்தார்.
அப்போது வனிதா கூறியதாவது: நான் குடியிருந்து வரும் நுங்கம்பாக்கம் வீடு,”சிட்டி போலீசின் கட்டுப்பாட்டில் வருவதால், இங்கும் வந்து புகார் அளித்துள்ளேன். அமெரிக்க தூதரகமும் தன்னிச்சையாக இங்கு நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால், நான் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளனர். தொடர்ந்து, போலீசாரின் நடவடிக்கைகள் குறித்தும் கண்காணித்து வருகின்றனர். கடந்த 24ம் தேதி, நுங்கம்பாக்கம் வீட்டில் வைத்து, என் கணவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற பின், நள்ளிரவு 2:30 மணியளவில், மூன்று ரவுடிகள் கையில் ஆயுதங்களுடன் வந்து என்னையும், குழந்தைகளையும் மிரட்டினர்.
சம்பவம் குறித்து வெளியில் சொல்லக் கூடாது; போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கக் கூடாது; மீறினால் கொன்று விடுவோம் என்று கூறி, என் மகள் ஜோவிகாவின் கழுத்தை நெரித்தனர். அதை என்னால் மறக்கவே முடியாது. போனில் பேசிய அருண் விஜய், “வெளியில் பேசினால் போட்டுத் தள்ளிவிடுவேன் என்று மிரட்டினார். குழந்தைகளை பற்றி கவலைப்படாமல்; அவர்களது, “இமேஜ், பாப்புலாரிட்டி பற்றியே கவலைப்படுகின்றனர். ஆட்களை அனுப்பியவர் இயக்குனர் ஹரிதான். அருண் விஜய்க்கு ஆட்கள் கிடையாது; ஹரிக்கு தான் அடியாட்கள் பலம் இருக்கிறது. புகார்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை; எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நான் நேர்மையாக, சட்ட ரீதியாக எதை செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்கிறேன். சட்டம் பதில் சொல்லும். என் அப்பா, தன் பேட்டியில் ஏதேதோ கூறி வருகிறார். அவர்கள் பேசுவதை நிறுத்த வேண்டும். புறநகர் கமிஷனர், என் புகாரின் மீதான உண்மைத் தன்மையை ஆய்வு செய்து, நான் செய்வது சரி தான் என்று கூறியுள்ளார். மேலும், அவரது கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் நிலையத்தில் தவறு நடந்துள்ளதை சுட்டிக் காட்டினேன். நான் கொடுத்த புகாரில் கூறியுள்ளதற்கு, அவர்கள் பதிவு செய்திருந்த வழக்கின் பிரிவுகள் பொருத்தமானதாக இல்லை என்பதை தெரிவித்தேன். அது குறித்து, மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். எனக்கு பல கொலை மிரட்டல்கள் வந்தன.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன், இருவர் வாழ்த்து சொல்வதற்காக என் வீட்டிற்கு வந்தனர். பொதுவாக நடந்த அந்த சந்திப்பின் போது, அவர்கள் என் குழந்தை படிக்கும் பள்ளி குறித்து கேட்டறிந்தனர். எதற்காக கேட்டார்கள் என்பது தெரியவில்லை. இது, எனக்கு அவர்கள் மீது, சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையும் புகாரில், குறிப்பிட்டுள்ளேன். இதற்காக நான், போலீஸ் பாதுகாப்பு கேட்கவில்லை; கொடுப்பதும் கொடுக்காததும் அவர்கள் விருப்பம்.
“எனக்கு எதுவும் நடக்கலாம்…! இந்த சம்பவத்தில், என் தந்தை, தனக்கு தெரிந்த அரசியல் தலைவரை சந்திக்க முயற்சி எடுத்துள்ளார். அவர், சந்திக்க மறுத்ததால், தனக்குள்ள,”பாப்புலாரிட்டியை பயன்படுத்தி வருகிறார். தைரியமாக போராடும் எனக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். விபத்து ஏற்படலாம்; கடத்தப்படலாம். அப்படி நடந்தால், அது யாரால் என்பது இவர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதால் நான் இங்கு புகார் அளித்துள்ளேன். கொலை மிரட்டல் விடுக்கின்றனர். நேர்மையாக போராடட்டும்; எதற்கு சட்ட விரோதமாக போக வேண்டும். அருண் மீது தான் நான் புகார் கொடுத்துள்ளேன்; அவர்தானே ஒளிந்து கொண்டுள்ளார். என்னிடம் யாரும் போனில் பேசவில்லை. நண்பர்கள் மட்டும் என்ன செய்வதென்று விசாரித்துள்ளனர். நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கப் போவதில்லை. நான் கோர்ட்டில், முன்ஜாமீன் கேட்டு மனு அளித்திருந்தேன். என் தந்தை, அதற்கு தனது வக்கீல் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணை வரும் 3ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வனிதா விஜயகுமார் கூறினார்.
“இது 30 ஆண்டு கோபம்: நடிகர் விஜயகுமார் – வனிதா இடையிலான மோதல் குறித்த கேள்விக்கு வனிதா விஜயகுமார் கூறும்போது,”"நான் மனித உரிமைகள் ஆணையத்திற்கு கொண்டு செல்லப் போகிறேன். இது என்னைச் சார்ந்த பிரச்னை மட்டுமல்ல; வெளிவந்தால் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு எடுத்துக் கூறுவதாக அமையும். இதைப் பார்த்து, சட்டத்தை தவறாக பயன்படுத்துபவர்கள் யோசிக்க வேண்டும். நான் என்ன செய்தாலும் விஷயம் வெளியில் வராது என நினைப்பவர்களுக்கு இது எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். இதுவரை பல சம்பவங்கள் நடந்துள்ளன. இது ஒரு நாள் பிரச்னையல்ல; 30 ஆண்டு கோபம்; இன்றைக்கு எரிமலையாக வெடித்துள்ளது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் கடந்த 15 ஆண்டுகளில் எவ்வளவோ சம்பவங்கள் நடந்துள்ளன, என்றார்.
“புத்தகமாக வெளியிடுவேன்: கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சினிமா வட்டாரத்தைக் கலக்கி வரும் நடிகர் விஜயகுமாரின் குடும்ப பிரச்னையில், “அவரது ரகசியங்களை வெளியிடுவேன் என, பலமுறை வனிதா விஜயகுமார் கூறினார். ஒவ்வொரு முறை பத்திரிகையாளர்களை சந்திக்கும் போதும்,”ரகசியம் குறித்து கேள்வி எழும். அப்போதெல்லாம் சமாளித்து வந்த வனிதா, கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று வந்தபோதும், ரகசியங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிறிது நேரம் யோசித்த வனிதா, “ரகசியங்கள் குறித்து நான் ஒரு புத்தகம் எழுதி வெளியிடுகிறேன்… படித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு நகர்ந்தார்.