Saturday, December 4, 2010

மலேசியா போகாத சூர்யா, ரத்த சரித்திரம் சிறப்புக் காட்சி ரத்து… ஈழத் தமிழர் எதிர்ப்பு காரணமா?

மலேசியாவில் உள்ள ஈழத் தமிழர்கள் எதிர்ப்பு காரணமாக நடிகர் சூர்யா தனது ரத்த சரித்திரம் படத்தின் மலேசிய சிறப்புக் காட்சிக்கு செல்லாமல் தவிர்த்து விட்டார் என்றும் இதனால் அந்தக் காட்சியே ரத்தாகிவிட்டதென்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் முதுகுத் தண்டு நுனியில் காயம் பட்டதால்தான் மலேசியா செல்லவில்லை என்று சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள ரத்த சரித்திரம் படம் இன்று வெளியாகிறது. இந்தப் படத்தில் சூர்யாவும் விவேக் ஓபராயும் நடித்துள்ளனர்.

ஐஃபா விழாவுக்கு தடையை மீறி விவேக் ஓபராய் சென்றதால் அவர் படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என தமிழர் அமைப்புகள் கூறியுள்ளன. இந்தப் படத்தில் நடித்துள்ள சூர்யா, பெங்களூர் மிர்ரர் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், விவேக் ஓபராயை எதிர்ப்பது அர்த்தமற்றது என்றும், தேவைப்பட்டால் அவருடன் தானும் இணைந்து இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதாகவும் கூறியிருந்தார். மேலும், ஈழப் பிரச்சினை செத்துப் போன ஒன்று (It’s a dead issue!) என்றும், அதுகுறித்து இப்போது பேசுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை, என்றும் அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.

இது ஈழத் தமிழர் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆரம்பத்தில் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த நாம் தமிழர் தலைவர் சீமானும், இந்த பேட்டியைப் பார்த்த பிறகு அமைதியாக பின்வாங்கிவிட்டார்.

இந்த நிலையில்தான் ரத்த சரித்திரம் வெளியாகிறது. தயாநிதி அழகிரியின் பேனரில் இந்தப் படம் வருகிறது.

படத்தின் பிரிமியர் காட்சி மலேசியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதில் சூர்யா பங்கேற்கவில்லை.

சூர்யா மலேசியாவுக்கு வந்தால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என தமிழ் அமைப்புகள் சில எச்சரித்திருந்தன. எனவே அவர் போகவில்லை என்று கூறப்பட்டது. இதனால் மலேசிய சிறப்புக் காட்சியே ரத்து செய்யப்பட்டது.

ஆனால், தான் மலேசியா போகாததற்குக் காரணம் முதுகுத் தண்டு நுனியில் ஏற்பட்ட காயம்தான் என்று சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.

7-ம் அறிவு படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தபோது இந்தக் காயம் ஏற்பட்டதாகவும், மற்றபடி, மலேசியா சென்று ரசிகர்களைச் சந்திக்க மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததாகவும் சூர்யா கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Free Host | lasik surgery new york