Tuesday, December 7, 2010

‘நிழல்கள் முதல் எந்திரன் வரை…’: வெளியாகும் வைரமுத்துவின் பாடல் தொகுப்பு!

கவிஞர் வைரமுத்துவின் தேர்ந்தெடுத்த 1000 திரைப்பாடல்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டு வெளியாக உள்ளது.

இளையராஜா இசையில், பாரதிராஜா இயக்கத்தில் உருவான நிழல்கள் படத்தில் இடம் பெற்ற ‘பொன்மாலைப் பொழுது…’ தான் கவிஞர் வைரமுத்துவின் முதல் திரைப்பாடல். அதன் பிறகு தமிழ் திரையுலக ரசிகர்களின் பல பொழுதுகளை ஆக்கிரமித்துக் கொண்டன அவர் பாடல்கள், இசைஞானியின் உதவியுடன்.

பத்தாண்டு நெடிய பயணத்துக்குப் பிறகு இளையராஜாவை விட்டுப் பிரிந்தார் வைரமுத்து. அந்த ஆரம்ப நாள்களில் வைரமுத்துவின் பயணம் சற்றுத் தடுமாறினாலும், சந்திரபோஸ் கைகொடுத்தார். பின்னர் வித்யாசாகர், ரஹ்மான், தேவா என புதுப்புது இசையமைப்பாளர்களுடன் கை கோர்த்து, அதே மிடுக்குடனும், செறிவுடனும் திரைப் பயணத்தைத் தொடர்ந்தார்.

கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் 7000 பாடல்களை எழுதியுள்ளார் வைரமுத்து.

இவற்றில் நிழல்கள் முதல் எந்திரன் வரை அவர் எழுதிய 1000 பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு தொகுப்பாக வெளியிடுகிறார்.

இந்தத் தொகுப்பின் சிறப்பு அம்சம், ஒவ்வொரு பாடலுக்கும் வைரமுத்து தன் பாணியில் முன்னுரை ஒன்றையும் தந்துள்ளதுதான்.

நிழல்கள் படத்தில் இடம் பெற்ற அவரது முதல் பாடலான ‘பொன்மாலைப் பொழுது…’ பாடல் தொடங்கி, ரஜினியின் எந்திரன் படத்தில் இடம் பெற்ற ‘அரிமா அரிமா ஆயிரம் அரிமா’ பாடல் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் ஜனவரி 2-ம் தேதி நடக்கிறது. முதல்வர் கருணாநிதி புத்தகத்தை வெளியிட, சூப்பர் ஸ்டார் ரஜினியும் கமல்ஹாஸனும் இணைந்து இந்த நூலைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், பாரதிராஜா இருவரும் விழாவுக்கு முன்னிலை வகிக்கிறார்கள்.

கவிஞர் வாலி, இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், ஏ.ஆர்.ரஹ்மான், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்துகின்றனர்.
பிரபல பின்னணி பாடகர்கள் கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பாடகிகள் பி.சுசீலா, எஸ்.ஜானகி உள்ளிட்டோர், இந்தத் தொகுப்பிலுள்ள பாடல்கள் சிலவற்றை மேடையில் பாடுகிறார்கள்.

0 comments:

Post a Comment

 
Free Host | lasik surgery new york