நடிப்பு: ஆர்யா, ஸ்ரேயா, சந்தானம், ப்ரீத்திகா ராவ்
ஒளிப்பதிவு: கேபி குருதேவ்
இசை: கலோனியல் கஸின்ஸ்
இயக்கம்: மணிகண்டன்
தயாரிப்பு: மீடியா ஒன் குளோபல்
பிஆர்ஓ: செல்வரகு
மறைந்த இயக்குநர் ஜீவாவின் சிஷ்யர் இயக்கியருக்கும் முதல்படம். நிறைய காட்சிகளில் ஜீவாவின் பாதிப்பு தெரிந்தாலும், ஒரு நல்ல பொழுதுபோக்கைத் தரும் நோக்கம் தெரிகிறது. ஆனால் நினைத்ததை முழுமையாக செயல்படுத்த முடியாமல் தடுமாறியிருக்கிறார் பல இடங்களில்.
லண்டனில் வசிக்கும் ஆர்யா, தன் பூர்வீக வீடு கடன்காரர்களின் பிடியில் மூழ்கிப் போகாமல் தடுப்பதற்காக காரைக்குடிக்கு பயணமாகிறார். அதே லண்டனில் வசிக்கும் எம்பிஏ பட்டதாரியான ஸ்ரேயா உடம்பு சரியில்லாத அப்பாவைப் பார்க்க மதுரைக்கு கிளம்புகிறார். இருவரும் ஒரே ப்ளைட்டில் பெங்களூர் வருகிறார்கள்.
பெங்களூரிலிருந்து மதுரைக்கு செல்லும் விமானம் ஸ்ட்ரைக் காரணமாக ரத்தாகிவிட, யதேச்சையாய் ஒரு ரயில் டிக்கெட் கிடைக்கிறது. வேறு ஒரு தம்பதியின் டிக்கெட். அவர்களின் பெயரில் இவர்கள் பொய்யாக கணவன் மனைவி போல பயணிக்கிறார்கள். ஆனால் அந்தப் பொய்யைக் கண்டுபிடித்து விடுகிறார் டிடிஆர். பாதிவழியில் இறக்கிவிட, கிடைக்கிற வாகனங்களில் காதலும் சிணுங்கலுமாக பயணிக்கிறார்கள். இறுதியில் எப்படி சேர்ந்தார்கள் என்பது க்ளைமாக்ஸ்.
இடையில் ஆர்யாவின் தந்தையின் (அவரும் ஆர்யாதான்… டபுள் ரோல்) காதல் ப்ளாஷ்பேக் விரிகிறது. நண்பனுக்காக காதலை விட்டுக் கொடுக்கிற அவரது கதை, மகன் ஆர்யா – ஸ்ரேயா காதலுடனே பயணிப்பது கொஞ்சம் புதுசு.
ஆர்யா தன் திறமையைக் காட்ட நல்ல வாய்ப்பு ஏற்படுத்தித் தந்துள்ளார் இயக்குநர். ஆனால் அவரோ சில காட்சிகளில் ஈடுபாடே இல்லாமல் வந்து போவதைப் போன்ற உணர்வு நமக்கு.
அந்தக் கால அப்பா ஆர்யா, இன்றைய மகன் ஆர்யா… இரண்டு கெட்டப்புகளையுமே கவனமெடுத்து உருவாக்கியிருக்கிறார்கள். இவற்றில் மகன் கேரக்டரில் ஆர்யா வழக்கம்போல வருகிறார். அப்பா வேடத்தில் பரவாயில்லை.
அவருக்கு இரண்டு நாயகிகள். இந்தக் கால ஆர்யாவுக்கு ஸ்ரேயா ஜோடி. கொஞ்சம் ஓவர் ஆக்டிங். ஆனால் க்ளாமர் என்ற பெயரில் அவர் செய்வதில் கிளுகிளு உணர்வுக்கு பதில் பரிதாபமே மிஞ்சுகிறது. உடம்பைப் பாத்துக்கங்க அம்மணி!
ஆனால் அவரை விட அழகில் ஈர்க்கிறார் மீனாள் என்ற கேரக்டரில் அறிமுகமாகியுள்ள ப்ரீத்திகா. அப்பா ஆர்யா – ப்ரீத்திகா காதல் காட்சிகளில் இளமை குறும்பு கொப்பளிக்கிறது. ஆனால் நடிப்பில் இன்னும் பயிற்சி வேண்டும் ப்ரீத்திகாவுக்கு.
சந்தானம், ஜெகனின் காமெடி படத்துக்கு ரொம்பவே கைகொடுத்துள்ளது. அப்பா ஆர்யாவின் நண்பராக வரும் அனுப்குமார் பாத்திரமும், அவரது நடிப்பும் மகா எரிச்சல். அப்பா ஆர்யாவின் காதலுக்கு ஏற்படும் முடிவும் படு செயற்கை.
ஆர்யா – ஸ்ரேயா ஜோடி ஓகே என்றாலும், இந்த இருவருக்குமான பயணம், ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ மாதிரி ச்சும்மா இளமையும் குறும்பும் நகைச்சுவையுமாக மிளர வேண்டாமா… காட்சிகள் தேமே என்று நகர்கின்றன. சில இடங்களில் பிடித்துத் தள்ள வேண்டிய அளவுக்கு ஸ்லோ.
தொழில்நுட்ப கலைஞர்களில் குருதேவின் ஒளிப்பதி ரம்மியமாக உள்ளது. படத்தின் பெரிய மைனஸ் கலோனியல் கஸின்ஸின் இசை. பாடல்கள் – பின்னணி இசை இரண்டிலுமே தம் போதவில்லை!
Read: In English
ஆர்யா – ஸ்ரேயா பயணக் காட்சிகளில் எடிட்டர் இன்னும் கத்தி வைத்திருக்கலாம்.
மணிகண்டனுக்கு இது முதல் படம் என்ற வகையில், சில மைனஸ்களை மன்னிக்கும் மனமிருந்தால், படத்தை பொறுத்துக் கொள்ள முடியும்!
0 comments:
Post a Comment