தமிழ் சினிமாவையும், தமிழர் ரசனையையும் குறை கூறிய ஆர்யா இனி தமிழில் நடிக்கக் கூடாது என்றும், அவர் மன்னிப்புக் கேட்காவிட்டால், மலையாளத்துக்கே போய்விட வேண்டும் என்றும் எதிர்ப்பு வலுத்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்தவர் ஆர்யா. சமீபத்தில் துபாயில் நடந்த விருது வழங்கும் விழாவில் இவர் பங்கேற்றார். தன்னை ஒரு மலையாளி என்று பெருமையுடன் அறிமுகப்படுத்திக் கொண்ட இவர், தமிழர்களை ரசனை இல்லாதவர்கள் என்றும், நல்ல படம் எடுக்கத் தெரியாதவர்கள் என்றும் விமர்சித்தார்.
“எனக்கு நடிப்பு இல்லாத சிறிய கதாபாத்திரம் கொடுங்கள்… மலையாளத்தில் வந்து நடிக்கிறேன். இங்கு இருக்கும் கூட்டத்தை பார்த்தால் ரெம்ப ஆச்சரியம்! தமிழ்நாட்டில் இப்படி கூட்டம் பார்க்கவே முடியாது” என்று தனது மலையாள விசுவாசத்தை ரொம்பவே காட்டியிருந்தார் ஆர்யா.
ஆர்யாவின் இந்த பேச்சுக்கு இயக்குநரும்,தயாரிப்பாளரும், பெப்சி அமைப்பின் தலைவருமான வி.சி.குகநாதன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து உலகமெங்கும் வாழும் தமிழர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
“ஆர்யாவே தமிழர்களிடம் மன்னிப்பு கேள்..இல்லையேல் மலையாளத்திற்கே ஓடு”, என்ற கோஷம் இப்போது கோடம்பாக்கத்திலும் சூடுபிடித்துள்ளது.
ஆர்யா விவகாரத்தால் பெப்சிக்கும் நடிகர் சங்கத் துக்கும் மோதல் மூண்டுள்ளது.
பிரச்சனை பெரிதாவதை உணர்ந்ததால் இது குறித்து பேசி முடிவெடுக்க முன்வந்துள்ளனர்.
இது தொடர்பாக திரையுலகினரின் கூட்டுக் குழு கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், பெப்சி உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் இதில் கலந்து கொள்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில், மலையாள திரைவிழாவில் ஆர்யா பேசியதன் ஒலி -ஒளிப்பதிவை போட்டுக் காட்டவிருக்கிறது பெப்சி அமைப்பு.
நாளை தனது பேச்சுக்கு ஆர்யா மன்னிப்புக் கேட்பார் என்று அவரது தரப்பில் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment