Thursday, December 2, 2010

நடிகர் சங்கத்துக்கு ஆர்யா விளக்கம்!

தமிழ் மக்களின் ரசனையை நான் குறை கூறவில்லை என்று நடிகர் ஆர்யா நடிகர் சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக முன்னேறியிருப்பவர் ஆர்யா. இவரது பூர்வீகம் கேரளா.

சமீபத்தில் நடந்த துபாய் பட விழாவில் ஆர்யா பங்கேற்று பேசும்போது, தமிழ் நடிகர்களை இழிவுபடுத்தியதாக செய்திகள் வெளியாகின.

நான் ஒரு மலையாளி. ஆனால் மலையாளத்தில் நடிக்கும் அளவு திறமை இல்லை. தமிழ் படங்களில் நடிக்க திறமை தேவை இல்லை. நடிக்கவும் தெரிய வேண்டாம். ஆனால் மலையாள படங்களில் நடிப்பதற்கு நடிப்பு தெரிந்திருக்க வேண்டும். மலையாளத்தில்தான் தரமான படங்கள் வருகின்றன என்றெல்லாம் அவர் பேசியிருந்தார். இது தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது.

இதற்கு பெப்சி தலைவர் வி.சி. குகநாதன் கண்டனம் தெரிவித்தார். தமிழ், நடிகர்களை இழிவாக பேசிய ஆர்யாவை விரட்டியடிப்போம் என்றும், தமிழனை இழிவுபடுத்தினால் குரல்வளையைக் கடிப்போம் என்றும் எச்சரித்தார்.

இந்த விவகாரத்தில் திடீரென நடிகர் சங்கம் தலையிட்டது. ஆர்யாவை விமர்சித்த வி.சி. குகநாதனை சரத்குமார், ராதாரவி ஆகியோர் கண்டித்தனர். இதையடுத்து பெப்சிக்கும் நடிகர் சங்கத்துக்கும் மோதல் மூண்டது. பெப்சி நிர்வாகிகள் ராதா ரவியை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். இந்து மக்கள் கட்சியினரும் ஆர்யா உருவப் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க திரையுலகினரின் கூட்டுக்குழு கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், பெப்சி உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் இதில் கலந்து கொள்கின்றனர்.

இதற்கிடையில் நடிகர் சங்கத்துக்கு ஆர்யா விளக்க கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் தமிழ் நடிகர்களை இழிவாக பேசவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

3இடியட்ஸ் படத்தில் எனது பாணியில் புதிதாக நடிப்பேன் – இலியானா

3 இடியட்ஸ் படத்தில் கரீனா கபூர் எப்படி நடித்தார் என்பது குறித்து கவலைப்படவில்லை.அப்படத்தை இதுவரை பார்க்கவும் இல்லை. எனது பாணியில், புதிய நடிப்பையே இப்படத்திற்குக் கொடுப்பேன் என்று கூறியுள்ளார் இலியானா.

ஷங்கர் இயக்கத்தில் 3 இடியட்ஸ் தமிழில் ரீமேக் ஆகிறது. விஜய், ஸ்ரீகாந்த், இலியானா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தெலுங்கில் மகேஷ்பாபு ஹீரோவாகவும், தமிழில் விஜய் ஹீரோவாகவும் நடிக்கவுள்ளனர். இரு படங்களிலும் இலியானாதான் நாயகி.

இப்படத்திற்காக அவருக்கு இரு மொழிகளிலும் சேர்த்து ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளதாக தெரிகிறது.

இப்படம் குறித்து இலியானா கூறுகையில், சம்பளம் எல்லாம் இன்னும் முடிவாகவில்லை. ஷங்கர் படம் என்பதால் உடனே ஒத்துக் கொண்டேன்.

தமிழில் என்னை இதுவரை நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை.இப்போது அதற்கான வாய்ப்பு வந்துள்ளதாக கருதுகிறேன். கரீனா கபூரைப் போல நான் நடிக்க மாட்டேன். எனது பாணியில் நடிப்பேன். புதிய நடிப்பை கொடுப்பேன். அப்படியே காப்பி அடித்து நடிக்க எனக்குப் பிடிக்காது.

தமிழில் விக்ரமுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இருந்தாலும் அது கை கூடவில்லை என்றார் இலியானா.

‘ஜெய்’ அஞ்சலி!

படு வேகமாக பிக்கப் ஆகி வரும் அஞ்சலி அடுத்து ஜெய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

அங்காடித் தெரு அஞ்சலிக்கு தனி முகத்தைப் பெற்றுக் கொடுத்த படம். இப்படத்திற்குப் பின்னர் அஞ்சலியின் கேரியர்கிராப் படு வேகமாக உயர்ந்து கொண்டிருக்கிறது.

மகிழ்ச்சி படத்தில் கலக்கல் நடிப்பையும், கூடவே கவர்ச்சியையும் கொடுத்த அஞ்சலி இனிமேல் கவர்ச்சியிலும் பின்னிப் பெடலெடுக்கப் போகிறாரம். தற்போது கை நிறையப் புதிய படங்களுடன் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் அஞ்சலி அடுத்து ஜெய்யுடன் ஜோடி போடுகிறார்.

சரவணன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை சரவணனின் குருவான இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். ஹாலிவுட் பட நிறுவனம் ஒன்றுடன் இணைந்து இப்படத்தை உருவாக்குகிறார் முருதகாஸ்.

படத்தில் இன்னொரு ஹீரோவும் உண்டு.அவரை இன்னும் முடிவு செய்யவில்லையாம். அவருக்கு ஜோடியாக அமலா பால் நடிப்பார் என்று தெரிகிறது.

இரு நாயகர்கள், இரு நாயகிகளுடன் வித்தியாசமான கதையமைப்புடன் கூடிய இப்படத்தின் ஷூட்டிங் டிசம்பரில் தொடங்குகிறதாம்.

லிம்கா சாதனைப் புத்தகத்தில் ‘சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி!’

உலகிலேயே முதல்முறையாக HDSLR என்ற கேமரா மூலம் படமாக்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையைப் பெறுகிறது ‘சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி’. இதற்காக அந்தப் படம் லிம்கா உலக சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

‘மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி’ என்ற படத்தை தயாரித்து நல்ல சினிமா ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்ற எஸ்.பி.எஸ் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் இரண்டாவதாக தயாரித்து வரும் படம் ‘சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி’.

இப்படத்தின் ஒளிப்பதிவாளரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.எஸ் குகன் முதல் முறையாக HDSLR என்ற தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய கேமராவினால் முழுப் படத்தையும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

பெரும்பாலான ஆங்கிலப்படங்களில் ஒருசில காட்சிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது இந்தவகை தொழில்நுட்பம். இந்தியாவில் ‘ஸ்லம் டாக் மில்லினியர்’ என்ற படத்தில் சில காட்சிகளுக்காகவும் பயன்படுத்தினார்கள்.

பார்ப்பதற்கு ஒரு ஸ்டில் கேமரா வடிவில் சிறியதாக இருக்கும் இந்த கேமரா முதல் முறையாக ‘சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி’ படத்தில் தான் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள எந்த காட்சிக்கும் வேறு வகையான கேமரா பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை உலகத்தில் உள்ள வேறு எந்த மொழிப்படங்களிலும் இந்த சாதனை நிகழ்த்தப்படவில்லை. இந்த சாதனை 2011 ஆண்டு வெளிவரவுள்ள லிம்கா உலக சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம்பெறுகிறது. இதற்கான சான்றிதழை லிம்கா சாதனைப் புத்தக நிறுவனம் சமீபத்தில் வழங்கியது.

ஒரு சனிக்கிழமை சாயங்காலம் 5 மணிக்கு ஆரம்பித்து மறு சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி வரை நடக்கும் ஒருவாரகால சம்பவங்களை க்ரைம், த்ரில்லர், ஆக்ஷன், காதல்,காமெடி கலந்து விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்களாம்.

இப் படத்தில் நாயகனாக கோயம்புத்தூரை சேர்ந்த சரத் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக பெங்களூரை சேர்ந்த மாலினி அறிமுகமாகிறார். இவர்களுடன் மீரா கிருஷ்ணன், இயக்குனர் ரதிபாலா, இயக்குனர் ரவிபாரதி, செல்வம், மாலதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டிசம்பர் 3-ம் தேதி திரைக்கு வருகிறது இந்தப் படம்.

அப்பா விஜயகுமாருடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை! – வனிதா

அப்பாவும் நடிகருமான விஜயகுமாருடன் இனி சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, என்று அவரது மகளும் நடிகையுமான வனிதா கூறினார்.

சென்னையை அடுத்த மதுரவாயல் போலீசில் தன்னை தாக்கியதாக மகள் வனிதா மற்றும் மருமகன் ஆனந்தராஜ் மீது நடிகர் விஜயகுமார் புகார் செய்தார். அதில், ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

இதே போல் தந்தை விஜயகுமார், சகோதரர் அருண்விஜய் ஆகியோர் மீது வனிதா தந்த புகாரில் மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில் நடிகர் விஜயகுமார், நடிகை வனிதா ஆகியோர் கொடுத்த புகார்கள் மீதான வழக்குகள் சென்னை புறநகர் மத்திய குற்றப் பிரிவுக்கு நேற்று மாற்றம் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று பகல் 12.50 மணிக்கு நடிகை வனிதா தனது கணவர் ஆனந்த்ராஜுடன் பரங்கிமலையில் உள்ள புறநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட்டிடம் தனது பிரச்சினைகளை விளக்கிக் கூறினார்.

பின்னர் பகல் 1.30 மணிக்கு கமிஷனர் அலுவலகத்தில் இருந்து கணவருடன் வெளியே வந்த வனிதா நிருபர்களிடம் கூறுகையில், “கடந்த 7-ந் தேதி எனது தந்தை மற்றும் குடும்பத்தினர் மீது தந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் எனது அப்பா 20-ந் தேதி தந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்தது ஏன்? என கேட்டேன். புறநகர் கமிஷனரிடம் பேசிய பின்னர் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. இதில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

என்னைப் பற்றி வதந்திகளை பரப்புகின்றனர். பைத்தியம், பொய் புகார் தருகிறார் என்று கூறுகின்றனர். எனது குழந்தை என்னிடம்தான் இருக்கும். ஆண்டவன் வந்தாலும் பிரிக்க முடியாது. இது விஜயகுமார்-வனிதா குடும்ப பிரச்சினை கிடையாது. அம்மாவிடம் இருந்து குழந்தையை பிரிக்க நினைக்கும் சமுக பிரச்சனை ஆகும்.

நாட்டில் தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை கிடைக்கும். நான் நியாயத்திற்காக போராடுகிறேன். நியாயம் கிடைக்கும் வரை எனது போராட்டம் தொடரும். அசிங்கப்படுத்திவிட்டு சமரசம் என கூறுவதா? சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இந்த வழக்கில் முக்கிய கதாநாயகனான அருண்விஜயை தப்பவிட்டுள்ளனர். அருண்விஜய் அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார். அவரை வரவழைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2 வது கணவர் என்று எழுத வேண்டாம்!

ஆனந்தராஜ் எனது கணவர். அவரை 2-வது கணவர் என செய்திகளில் குறிப்பிட வேண்டாம். 7 திருமணம் செய்தவரை 7-வது கணவர் என்றா குறிப்பிடுவீர்கள்?,”என்றார்.

 
Free Host | lasik surgery new york