Thursday, December 2, 2010

லிம்கா சாதனைப் புத்தகத்தில் ‘சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி!’

உலகிலேயே முதல்முறையாக HDSLR என்ற கேமரா மூலம் படமாக்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையைப் பெறுகிறது ‘சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி’. இதற்காக அந்தப் படம் லிம்கா உலக சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

‘மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி’ என்ற படத்தை தயாரித்து நல்ல சினிமா ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்ற எஸ்.பி.எஸ் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் இரண்டாவதாக தயாரித்து வரும் படம் ‘சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி’.

இப்படத்தின் ஒளிப்பதிவாளரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.எஸ் குகன் முதல் முறையாக HDSLR என்ற தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய கேமராவினால் முழுப் படத்தையும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

பெரும்பாலான ஆங்கிலப்படங்களில் ஒருசில காட்சிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது இந்தவகை தொழில்நுட்பம். இந்தியாவில் ‘ஸ்லம் டாக் மில்லினியர்’ என்ற படத்தில் சில காட்சிகளுக்காகவும் பயன்படுத்தினார்கள்.

பார்ப்பதற்கு ஒரு ஸ்டில் கேமரா வடிவில் சிறியதாக இருக்கும் இந்த கேமரா முதல் முறையாக ‘சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி’ படத்தில் தான் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள எந்த காட்சிக்கும் வேறு வகையான கேமரா பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை உலகத்தில் உள்ள வேறு எந்த மொழிப்படங்களிலும் இந்த சாதனை நிகழ்த்தப்படவில்லை. இந்த சாதனை 2011 ஆண்டு வெளிவரவுள்ள லிம்கா உலக சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம்பெறுகிறது. இதற்கான சான்றிதழை லிம்கா சாதனைப் புத்தக நிறுவனம் சமீபத்தில் வழங்கியது.

ஒரு சனிக்கிழமை சாயங்காலம் 5 மணிக்கு ஆரம்பித்து மறு சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி வரை நடக்கும் ஒருவாரகால சம்பவங்களை க்ரைம், த்ரில்லர், ஆக்ஷன், காதல்,காமெடி கலந்து விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்களாம்.

இப் படத்தில் நாயகனாக கோயம்புத்தூரை சேர்ந்த சரத் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக பெங்களூரை சேர்ந்த மாலினி அறிமுகமாகிறார். இவர்களுடன் மீரா கிருஷ்ணன், இயக்குனர் ரதிபாலா, இயக்குனர் ரவிபாரதி, செல்வம், மாலதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டிசம்பர் 3-ம் தேதி திரைக்கு வருகிறது இந்தப் படம்.

0 comments:

Post a Comment

 
Free Host | lasik surgery new york