பெரிசாக என்ன எடுத்திருக்கப் போகிறார்கள்… பத்தோடு பதினொன்றாக இருக்குமோ என்ற எண்ணத்துடன் பார்க்க உட்கார்ந்தோம் நாளை வெளிவரவிருக்கும் ‘தா’ திரைப்படத்தை. படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே தெரிந்துவிட்டது, இது ‘சரக்குள்ள இயக்குநரி’ன் படம் என்பது.
படத்தின் க்ளைமாக்ஸ் முடிவில், பத்திரிகையாளர்கள் தங்களையும் அறியாமல் கைதட்டிப் பாராட்டினர்.
தமிழில் உண்மையிலேயே வித்தியாசமான, அதேநேரம் பொழுதுபோக்கும் நிறைந்தபடம் என்ற பெருமை தா படத்துக்கு உண்டு.
ஒரு இயக்குநரின் ஆளுமையை படம் முழுக்க உணர முடிந்தது.
சுமாரான படத்துக்குக் கூட தொலைக்காட்சி விளம்பரங்கள் தூள் பறக்க, இந்த சூப்பர் படம் சந்தடியில்லாமல் வருகிறதே என்று படத்தின் இயக்குநரான ஆர்கே சூர்யபிரகாஷிடம் கேட்டோம்.
“நிச்சயம் பெரிய லெவல்ல பண்ணனும் சார். படம் பார்த்த பத்திரிகைக்காரங்க ஒருமனதா பாராட்டியிருப்பது நம்பிக்கையா இருக்கு” என்றார்.
சமுத்திரக்கனியிடம் உதவியாளராக இருந்த சூர்ய பிரகாஷுக்கு இது முதல்படம். படத்தின் ஹீரோ ஸ்ரீஹரி இதற்கு முன் ஏர்லைன்ஸில் பணியாற்றிக் கொண்டிருந்தாராம். கதை மீதிருந்த நம்பிக்கையில் வேலையை விட்டுவிட்டு ‘தா’ ஹீரோவாகியிருக்கிறார்.
நாயகியாக புதுமுகம் நிஷா அறிமுகமாகிறார். இசையமைப்பாளரும் ஒரு புதுமுகம்தான். பெயர் ஸ்ரீவிஜய்.
ராஜேஷ் உத்தமன் தயாரித்துள்ள இந்தப் படம் நாளை முதல் திரைக்கு வருகிறது.
0 comments:
Post a Comment