Monday, November 29, 2010

விபச்சார வழக்கில் என்னை கைது செய்ய முயற்சி! – வனிதா புதிய புகார்

தந்தை மீது தினசரி ஒரு குற்றச்சாட்டு, பேட்டி என்கிற அளவுக்கு இறங்கிவிட்டார் நடிகர் விஜயகுமார் மகள் வனிதா.

நடிகை வனிதா தனது தந்தை மீது இன்றும் ஏராளமான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். அதில் தனக்கும் குடும்பத்தினருக்கும் எதனால் பிரச்சினை ஏற்பட்டது என்றும் விளக்கியுள்ளார்.

அவரது பேட்டி:

14வது வயதில் மாணிக்கம் என்ற படத்தில் நடித்தேன். ராஜ்கிரண் ஜோடி. அதிலிருந்தே எனக்கு பிரச்சினைகள் ஆரம்பித்து விட்டன. தவிர்க்க முடியாத காரணத்தால் எனது 16-வது வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன். தோழி வீட்டில் இருந்த என்னை அடித்து உதைத்து அழைத்துச் சென்றனர்.

பின்னர் டி.வி.யில் நடித்தபோது என்னுடன் ஜோடியாக நடித்த ஆகாஷ் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். குடும்பத்தில் இருந்து தப்பிப்பதற்காக அதற்கு சம்மதித்தேன். அப்பாவிடம் இதைச் சொன்னபோது என்னை அடித்து உதைத்தார்.

ஆகாஷுடன் விவாகரத்து ஏன்?

ஒரு வாரத்துக்குப் பிறகு தான் திருமணத்துக்கு சம்மதம் கிடைத்தது. இந்த திருமணத்துக்குப் பிறகும் நான் நிம்மதியாக இல்லை. இதற்கிடையே எனக்கு முதல் குழந்தை ஸ்ரீஹரி பிறந்தான். பணப் பிரச்சினை ஏற்பட்டது. கணவர் ஆகாஷை பிரிந்து விட முடிவு செய்தேன். இதற்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். 2-வது பெண் குழந்தையும் பிறந்தது.

எதற்கெடுத்தாலும் கோபப்படும் என் கணவர் ஆகாஷடன் சேர்ந்து வாழ முடியவில்லை. 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தேன். ஆனால் அப்பா, விவாகரத்து செய்தால் பத்திரிகையில் அதை பெரிதாக்குவார்கள். எனவே அவரை பிரிந்து வந்து விடு. நம்ம வீட்டில் குழந்தையை பார்த்துக் கொள்ளலாம் என்றார்கள். இந்த கால கட்டத்தில்தான் எனக்கும் அப்பாவுக்கும் நேரடியாக பிரச்சினைகள் அதிகமாக உருவாகின.

அக்கா கவிதாவின் விவாகரத்து:

எனது அக்கா கவிதாவை 16 வயதிலேயே நடிகை விஜயகுமாரியின் மகனுக்கு திருமணம் செய்து வைத்தனர். ஒரு குழந்தை பிறந்த பிறகு விவாகரத்து செய்துட்டாங்க. பின்னர் வேறு திருமணம் செய்து வைத்தனர்.

ஆனால் ஆகாஷடன் வாழ முடியாத எனக்கு விவாகரத்து விஷயத்தில் முட்டுக்கட்டை போட்டனர். இதை கேட்டபோது அப்பா அடித்து உதைத்தார். ஆகாஷும் 2007-ல்தான் விவாகரத்துக்கு சம்மதித்தார்.

அருணுக்கு திருமண ஏற்பாடு நடந்தது. அப்போது என்னை வீட்டை விட்டு வெளியேற்றினர். என் பையனை கணவரிடம் இருந்து மீட்கும் போராட்டம்… விவாகரத்து பிரச்சினை… இதற்கிடையே கைக் குழந்தையுடன் நான் அநாதையாக தெருவில் நின்றேன்.

என் தோழி வீட்டில் குழந்தையுடன் தங்கினேன். அருண் திருமணத்துக்குக் கூட என்னை கூப்பிடவில்லை. பிறகு தனியாக வீடு பார்த்து தங்கினேன். 2 மாதம் கழித்துதான் அம்மா என்னை அழைத்தார். சென்று பார்த்தேன்.

இந்த நிலையில் ராஜனை சந்தித்தேன். இருவரும் விரும்பி திருமணம் செய்து கொண்டோம். 2007-ல் எங்கள் திருமணம் ஹைதராபாத்தில் நடந்தது. இது எளிமையான பதிவுத் திருமணம். ராஜனோடும் எனக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்த சமயத்தில் ஆகாஷிடம் இருந்த மகன் ஸ்ரீஹரியை என்னுடன் தங்கி இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பிறகு வெள நாட்டில் வாழ முடிவு செய்து நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் நானும் ராஜனும் 2 குழந்தைகளோடு வாழ்ந்தோம். அப்பாவும்- அம்மாவும் எங்களுடன் வந்து ஒரு மாதம் தங்கினார்கள். பின்னர் சென்னையில் குடியிருக்கலாம் என்று நினைத்து அங்கிருந்து திரும்பினோம்.

தற்போது அப்பா பெயரில் விஜயகுமார் மீடியா என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறேன். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை என் குழந்தைகளை அப்பா வீட்டுக்கு அழைத்துச் செல்வார். ஞாயிறு இரவு திரும்ப கொண்டு விடுவார். தீபாவளிக்கும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போனார். ஆனால் திரும்ப விடவில்லை.

நவம்பர் 7-ந்தேதி போய் கேட்ட போது, மகன் ஸ்ரீஹரி இருக்கட்டும். மற்ற 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு போ என்று அப்பா சொன்னார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது அருண் என்னை முரட்டுத்தனமாக அடித்தார். உடனே இதுபற்றி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். 20-ந் தேதி மீண்டும் கணவர் ராஜனுடன் சென்று மகனை கேட்ட போது மீண்டும் தகராறு ஏற்பட்டது. கேவலமாகத் திட்டி என்னை அடிக்க முயன்ற அப்பாவை என் கணவர் தடுத்தார்.

இதற்காக எந்த தவறுமே செய்யாத என் கணவர் மீது அப்பா போலீசில் புகார் செய்தார். போலீசாரும் என் கணவர் ராஜனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். என்னை அடித்ததாக அருண் மீது கடந்த 7-ந்தேதி கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை இல்லை. நான் இதுவரை வாழ்க்கையில் போராடிக் கொண்டுதான் இருக்கிறேன்.

உண்மைகளை வெளியே சொல்லுவேன் என்று நான் அறிவித்தேன். எனவே, என் மீது விபசார வழக்கு போட்டு சிறையில் தள்ளவும் தயங்க மாட்டார்கள். என் மானம் போனாலும் பரவாயில்லை. என் கணவர், பிள்ளைகள் உயிர் போனாலும் பரவா யில்லை. அவங்க மட்டும் கவுரவமாக வாழ வேண்டும் என்று நினைக்கும் அப்பா- அம்மாவை இப்போதுதான் பார்க்கிறேன்.

எந்த பிரச்சினை வந்தாலும் அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். எத்தனை பொய் வழக்கு போட்டாலும் தாங்குவேன். ஆனா எனது அப்பா காலில் இனி விழ மாட்டேன்…”, என்றார் ஆவேசமாக.

0 comments:

Post a Comment

 
Free Host | lasik surgery new york