லாஸ் ஏஞ்சல்ஸ்: நேற்று மாஸ்கோவில் சர்வதேச புலிகள் உச்சி மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்ட லியோனார்டோ டி காப்ரியோ புலிகளை அழிவிலிருந்து காப்பாற்ற ரூ. 4. 4 கோடி நன்கொடை அளித்துள்ளார்.
டைட்டானிக் படம் மூலம் உலகப் புகழ்பெற்ற அமெரிக்க நடிகர் டி காப்ரியோ (36) தற்போது உலக வனவிலங்குகள் நிதி அமைப்புடன் சேர்ந்து புலிகளைக் காக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே அந்த அமைப்புக்கு ரூ. 4. 4. கோடி நன்கொடை அளித்துள்ளார்.
சுற்றுச்சூழல் ஆர்வலரான அவர் உலக வனவிலங்குகள் நிதி அமைப்பின் போர்டு உறுப்பினர். அவர் அன்மையில் நேபாளம் மற்றும் பூட்டான் சென்று அங்குள்ள புலிகள் வசிப்பிடத்தை பார்வையிட்டார்.
உலகில் உள்ள வனங்களில் தற்போது 3, 200 புலிகள் தான் உள்ளன. கடந்த நூற்றாண்டில் 100,000 புலிகள் இருந்தன என்று வனவிலங்கு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வரும் 2022-ம் ஆண்டிற்குள் உலகில் புலிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக்க ரஷ்யா இந்த வாரம் 13 நாடுகள் கலந்து கொள்ளும் கூட்டத்தை புனித பீட்டர்ஸ்பர்கில் நடத்துகிறது.
புலிகள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த ஞாயிற்று கிழமை மாஸ்கோவிற்கு புறப்பட்ட காப்ரியோவின் விமானம் என்ஜின் கோளாறு காரணமாக நியூ யார்கிற்கு திரும்பியது.
புலிகள் கடத்தப்படுவதை தடுக்கவும், புலிகள் வாழும் காடுகளை பாதுகாக்கவும் காப்ரியோ அளித்த தொகை பயன்படுத்தப்படும்.
இது குறித்து காப்ரியோ கூறியதாவது,
புலிகளின் உடல் உறுப்புகளுக்காக அவை சட்டவிரோதமாகக் கடத்தி கொல்லப்படுகின்றன. மேலும் பாம் ஆயில், டிம்பர், பேப்பர் தயாரிப்பதற்காக காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் புலிகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது. இதற்கான உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இன்னும் சில ஆண்டுகளில் உலகில் புலிகளே இருக்காது என்றார்.
பங்களாதேஷ், பூட்டான், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபால், ரஷ்யா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 13 நாடுகளில் தான் தற்போது புலிகள் உள்ளன.
0 comments:
Post a Comment