நான் எந்த ஒரு நடிகருக்கும் விரோதி கிடையாது. ஆனால் யாராவது தமிழர்களைப் பழித்தால் அவர்களது குரல்வளையைக் கடிப்பேன் என்று ஆவேசமாக கூறியுள்ளார் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன்.
இலங்கைக்கு யாரும் போக வேண்டாம் என்று பல்வேறு தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள், உலகத் தமிழர்கள் கோரிக்கை விடுத்து வந்தபோதிலும் அதை மதிக்காமல் நடிகை ஆசின் இலங்கைக்குப் போனார். போனதோடு நில்லாமல் ராஜபக்சே மனைவியோடும் பல இடங்களுக்கு சுற்றுலா போல சென்று வந்தார்.
இதுதொடர்பாக நடிகர் சங்கம் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியும் இதுவரை ஆசின் மீது உருப்படியாக எதுவும் எடுத்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் தமிழ் நடிகர்களை மறைமுகமாக கேலி செய்வது போல பேசிய நடிகர் ஆர்யாவைக் கண்டித்து வி.சி.குகநாதன் பேசியதும், தென்னிந்திய நடிகர் சங்கம் படு வேகமாக கண்டனம் தெரிவித்திருந்தது.
இதற்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளார் வி.சி.குகுநாதன். இதுகுறித்து அவர் செய்தியாளர்களை அழைத்துப் பேசுகையில்,
உங்கள் விருப்பம் படவிழாவில், எந்த நடிகரின் பெயரையும் குறிப்பிட்டு நான் பேசவில்லை. மலையாள ஏசியாநெட் நடத்திய நிகழ்ச்சியில் ஒரு நடிகர் கலந்துகொண்டு பேசும்போது, மலையாள படங்களில் நடிக்க வேண்டும் என்றால் நடிப்பு தெரிந்திருக்க வேண்டும். அது எனக்கு கொஞ்சம்தான் தெரியும். அதற்கு தகுந்த மாதிரி வேஷம் கொடுத்தால், அதை நான் கவுரவமாக நினைத்து மலையாள படங்களில் நடிப்பேன். ஏனென்றால் நான் ஒரு மலையாளி. எல்லோரும் பார்க்கிற மாதிரி மலையாள பட உலகில் இன்னும் தரமான படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் மலையாள படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
அந்த நடிகரின் பேச்சு தமிழ் நடிகர்களை கேவலப்படுத்துவது மாதிரி இருக்கிறது. உலக புகழ்பெற்ற `நடிகர்திலகம்’ சிவாஜிகணேசனில் இருந்து கமல்ஹாசன் வரை பல அபூர்வ நடிகர்களை கொண்டது, தமிழ் பட உலகம். அவர்களை எல்லாம் கேவலப்படுத்துகிற மாதிரி அந்த நடிகர் பேசியிருக்கிறார்.
இதை நான் பெப்சி தலைவராக கூறவில்லை. தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒரு அங்கத்தினராக கூறுகிறேன். 10 வயதில் இருந்தே தமிழ் மொழிக்காகவும், தமிழ் இனத்துக்காகவும் நான் போராடியவன் என்பது தமிழ் மக்களுக்கு தெரியும்.
நான் யாருக்கும் கயிறு திரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அடிக்கடி கட்சி மாறுகிற ஆளும் இல்லை. தமிழர்களுக்காக போராடுகிற எல்லா தமிழர்களுடனும் இருப்பேன்.
நான், எந்த நடிகருக்கும் விரோதி அல்ல. ஆனால் தமிழர்களையும், தமிழ் கலைஞர்களையும் பழித்தால், அவர்களின் குரல்வளையை கடித்து துப்பவும் தயங்க மாட்டேன் என்று ஆவேசமாக கூறினார் வி.சி.குகநாதன்.
0 comments:
Post a Comment