Tuesday, December 7, 2010

சிக்குபுக்கு – திரை விமர்சனம்

நடிப்பு: ஆர்யா, ஸ்ரேயா, சந்தானம், ப்ரீத்திகா ராவ்
ஒளிப்பதிவு: கேபி குருதேவ்
இசை: கலோனியல் கஸின்ஸ்
இயக்கம்: மணிகண்டன்
தயாரிப்பு: மீடியா ஒன் குளோபல்
பிஆர்ஓ: செல்வரகு

மறைந்த இயக்குநர் ஜீவாவின் சிஷ்யர் இயக்கியருக்கும் முதல்படம். நிறைய காட்சிகளில் ஜீவாவின் பாதிப்பு தெரிந்தாலும், ஒரு நல்ல பொழுதுபோக்கைத் தரும் நோக்கம் தெரிகிறது. ஆனால் நினைத்ததை முழுமையாக செயல்படுத்த முடியாமல் தடுமாறியிருக்கிறார் பல இடங்களில்.

லண்டனில் வசிக்கும் ஆர்யா, தன் பூர்வீக வீடு கடன்காரர்களின் பிடியில் மூழ்கிப் போகாமல் தடுப்பதற்காக காரைக்குடிக்கு பயணமாகிறார். அதே லண்டனில் வசிக்கும் எம்பிஏ பட்டதாரியான ஸ்ரேயா உடம்பு சரியில்லாத அப்பாவைப் பார்க்க மதுரைக்கு கிளம்புகிறார். இருவரும் ஒரே ப்ளைட்டில் பெங்களூர் வருகிறார்கள்.

பெங்களூரிலிருந்து மதுரைக்கு செல்லும் விமானம் ஸ்ட்ரைக் காரணமாக ரத்தாகிவிட, யதேச்சையாய் ஒரு ரயில் டிக்கெட் கிடைக்கிறது. வேறு ஒரு தம்பதியின் டிக்கெட். அவர்களின் பெயரில் இவர்கள் பொய்யாக கணவன் மனைவி போல பயணிக்கிறார்கள். ஆனால் அந்தப் பொய்யைக் கண்டுபிடித்து விடுகிறார் டிடிஆர். பாதிவழியில் இறக்கிவிட, கிடைக்கிற வாகனங்களில் காதலும் சிணுங்கலுமாக பயணிக்கிறார்கள். இறுதியில் எப்படி சேர்ந்தார்கள் என்பது க்ளைமாக்ஸ்.

இடையில் ஆர்யாவின் தந்தையின் (அவரும் ஆர்யாதான்… டபுள் ரோல்) காதல் ப்ளாஷ்பேக் விரிகிறது. நண்பனுக்காக காதலை விட்டுக் கொடுக்கிற அவரது கதை, மகன் ஆர்யா – ஸ்ரேயா காதலுடனே பயணிப்பது கொஞ்சம் புதுசு.

ஆர்யா தன் திறமையைக் காட்ட நல்ல வாய்ப்பு ஏற்படுத்தித் தந்துள்ளார் இயக்குநர். ஆனால் அவரோ சில காட்சிகளில் ஈடுபாடே இல்லாமல் வந்து போவதைப் போன்ற உணர்வு நமக்கு.

அந்தக் கால அப்பா ஆர்யா, இன்றைய மகன் ஆர்யா… இரண்டு கெட்டப்புகளையுமே கவனமெடுத்து உருவாக்கியிருக்கிறார்கள். இவற்றில் மகன் கேரக்டரில் ஆர்யா வழக்கம்போல வருகிறார். அப்பா வேடத்தில் பரவாயில்லை.

அவருக்கு இரண்டு நாயகிகள். இந்தக் கால ஆர்யாவுக்கு ஸ்ரேயா ஜோடி. கொஞ்சம் ஓவர் ஆக்டிங். ஆனால் க்ளாமர் என்ற பெயரில் அவர் செய்வதில் கிளுகிளு உணர்வுக்கு பதில் பரிதாபமே மிஞ்சுகிறது. உடம்பைப் பாத்துக்கங்க அம்மணி!

ஆனால் அவரை விட அழகில் ஈர்க்கிறார் மீனாள் என்ற கேரக்டரில் அறிமுகமாகியுள்ள ப்ரீத்திகா. அப்பா ஆர்யா – ப்ரீத்திகா காதல் காட்சிகளில் இளமை குறும்பு கொப்பளிக்கிறது. ஆனால் நடிப்பில் இன்னும் பயிற்சி வேண்டும் ப்ரீத்திகாவுக்கு.

சந்தானம், ஜெகனின் காமெடி படத்துக்கு ரொம்பவே கைகொடுத்துள்ளது. அப்பா ஆர்யாவின் நண்பராக வரும் அனுப்குமார் பாத்திரமும், அவரது நடிப்பும் மகா எரிச்சல். அப்பா ஆர்யாவின் காதலுக்கு ஏற்படும் முடிவும் படு செயற்கை.

ஆர்யா – ஸ்ரேயா ஜோடி ஓகே என்றாலும், இந்த இருவருக்குமான பயணம், ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ மாதிரி ச்சும்மா இளமையும் குறும்பும் நகைச்சுவையுமாக மிளர வேண்டாமா… காட்சிகள் தேமே என்று நகர்கின்றன. சில இடங்களில் பிடித்துத் தள்ள வேண்டிய அளவுக்கு ஸ்லோ.

தொழில்நுட்ப கலைஞர்களில் குருதேவின் ஒளிப்பதி ரம்மியமாக உள்ளது. படத்தின் பெரிய மைனஸ் கலோனியல் கஸின்ஸின் இசை. பாடல்கள் – பின்னணி இசை இரண்டிலுமே தம் போதவில்லை!
Read: In English
ஆர்யா – ஸ்ரேயா பயணக் காட்சிகளில் எடிட்டர் இன்னும் கத்தி வைத்திருக்கலாம்.

மணிகண்டனுக்கு இது முதல் படம் என்ற வகையில், சில மைனஸ்களை மன்னிக்கும் மனமிருந்தால், படத்தை பொறுத்துக் கொள்ள முடியும்!

300 மூட்டை அரிசி தானம் செய்து ட்ரைலர் வெளியிட்ட விஜய்!

தனது அடுத்த படமான காவலன் ட்ரைலர் வெளியீட்டு விழாவை ஏழைகளுக்கு உதவும் வகையில் இன்று நடத்தினார் நடிகர் விஜய்.

ட்ரைலர் வெளியீட்டையொட்டி 300 ஏழைக் குடும்பங்களுக்கு 300 மூட்டை அரிசி தானம் செய்தார்.

விஜய் நடித்த காவலன் பட டிரெய்லர் வெளியீட்டு விழாவும், ஏழைகளுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சியும் வடபழனி ஜே.எஸ்.திருமண மண்டபத்தில் சனிக்கிழமை காலை நடந்தது.

விழாவில் விஜய் பங்கேற்று 300 ஏழை குடும்பங்களுக்கு 300 மூட்டை இலவச அரிசி வழங்கினார். காவலன் பட டிரைலரையும் வெளியிட்டார். விழாவில் இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஷக்தி சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய விஜய், “காவலன் பட டிரைய்லர் வெளியிட அழைத்ததும் நான் ஒப்புக்கொள்ளவில்லை. பட டிரெய்லர் விழாவுக்கு செலவிடும் தொகையை ஏழைகளுக்கு பயன்படும் வகையில் ஏதாவது செய்யலாம் என்று தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பரத்திடம் கூறினேன்.

என்னுடைய வேண்டுகோளை ஏற்று, ஷக்தி சிதம்பரம் ஏழைகளுக்கு இலவச அரிசி கொடுக்க சம்மதித்தார். அதோடு படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவையும் நடத்துவதாக கூறியதால், விழாவுக்கு வர சம்மதித்தேன் என்றார்.

விழாவில் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன், மேனேஜர் மற்றும் பிஆர்ஓ பிடி செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியையொட்டி ஜேஎஸ் திருமண மண்டபத்தையொட்டியுள்ள இடங்களில் விஜய்யின் பெரிய பெரிய கட் அவுட்டுகள், சாரட் வண்டியில் விஜய் பயணிப்பது போன்ற அட்டை பொம்மை போன்றவற்றை வைத்திருந்தனர்.

‘நிழல்கள் முதல் எந்திரன் வரை…’: வெளியாகும் வைரமுத்துவின் பாடல் தொகுப்பு!

கவிஞர் வைரமுத்துவின் தேர்ந்தெடுத்த 1000 திரைப்பாடல்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டு வெளியாக உள்ளது.

இளையராஜா இசையில், பாரதிராஜா இயக்கத்தில் உருவான நிழல்கள் படத்தில் இடம் பெற்ற ‘பொன்மாலைப் பொழுது…’ தான் கவிஞர் வைரமுத்துவின் முதல் திரைப்பாடல். அதன் பிறகு தமிழ் திரையுலக ரசிகர்களின் பல பொழுதுகளை ஆக்கிரமித்துக் கொண்டன அவர் பாடல்கள், இசைஞானியின் உதவியுடன்.

பத்தாண்டு நெடிய பயணத்துக்குப் பிறகு இளையராஜாவை விட்டுப் பிரிந்தார் வைரமுத்து. அந்த ஆரம்ப நாள்களில் வைரமுத்துவின் பயணம் சற்றுத் தடுமாறினாலும், சந்திரபோஸ் கைகொடுத்தார். பின்னர் வித்யாசாகர், ரஹ்மான், தேவா என புதுப்புது இசையமைப்பாளர்களுடன் கை கோர்த்து, அதே மிடுக்குடனும், செறிவுடனும் திரைப் பயணத்தைத் தொடர்ந்தார்.

கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் 7000 பாடல்களை எழுதியுள்ளார் வைரமுத்து.

இவற்றில் நிழல்கள் முதல் எந்திரன் வரை அவர் எழுதிய 1000 பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு தொகுப்பாக வெளியிடுகிறார்.

இந்தத் தொகுப்பின் சிறப்பு அம்சம், ஒவ்வொரு பாடலுக்கும் வைரமுத்து தன் பாணியில் முன்னுரை ஒன்றையும் தந்துள்ளதுதான்.

நிழல்கள் படத்தில் இடம் பெற்ற அவரது முதல் பாடலான ‘பொன்மாலைப் பொழுது…’ பாடல் தொடங்கி, ரஜினியின் எந்திரன் படத்தில் இடம் பெற்ற ‘அரிமா அரிமா ஆயிரம் அரிமா’ பாடல் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் ஜனவரி 2-ம் தேதி நடக்கிறது. முதல்வர் கருணாநிதி புத்தகத்தை வெளியிட, சூப்பர் ஸ்டார் ரஜினியும் கமல்ஹாஸனும் இணைந்து இந்த நூலைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

இயக்குநர்கள் கே.பாலச்சந்தர், பாரதிராஜா இருவரும் விழாவுக்கு முன்னிலை வகிக்கிறார்கள்.

கவிஞர் வாலி, இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், ஏ.ஆர்.ரஹ்மான், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்துகின்றனர்.
பிரபல பின்னணி பாடகர்கள் கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பாடகிகள் பி.சுசீலா, எஸ்.ஜானகி உள்ளிட்டோர், இந்தத் தொகுப்பிலுள்ள பாடல்கள் சிலவற்றை மேடையில் பாடுகிறார்கள்.

பண்புள்ளவனுக்கு மெயின் ரூட்டு – கெட்டவனுக்கு பைபாஸு! -ரஜினி

பொதுவாழ்வில் பண்பாடுடன் நடந்து கொள்வோர் எப்போதும் மெயின் ரோட்டில் ஊருக்குள் தலைநிமிர்ந்து செல்லலாம். மோசமானவனா இருந்தா ப்ளாட்பாரம் கூட கிடைக்காது, பைபாஸ்ல ஊருக்கு வெளிய போக வேண்டியதுதான், என்றார் ரஜினிகாந்த்.

தமிழக முதல்வர் கருணாநிதி கதை வசனம் எழுதிய இளைஞன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் நடந்தது. சத்யம் திரையரங்கில் நடந்த விழாவில் முதல் இசைத் தட்டை முதல்வர் கருணாநிதி வெளியிட, ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியது:

மதுரையில் நடந்த மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் திருமண விழாவில் கலந்து கொண்டுவிட்டு, வீடு திரும்பியதும் முதல்வரிடமிருந்து போன் வந்தது. வருகிற 5-ம் தேதி ஊரில் இருக்கிறீர்களா? என்று கேட்டார். ஆமாம் என்றேன். வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறீர்களா என்றார். இல்லை என்றேன். அதன் பிறகு இந்த இளைஞன் பட இசை விழா இருக்கிறது. நீங்க வரணும்னு ஆசைப்படறோம்… வரமுடியுமா என்றார். நான் உடனே சரி சொல்லிவிட்டேன்.

அவர் வயசென்ன, இருக்கிற நிலை என்ன.. அவர் வயசுக்கு என்கிட்ட இவ்ளோ தூரம் கேட்டிருக்க வேண்டாம். இந்த நிகழ்ச்சி இருக்கு வாங்கன்னு கூப்பிட்டிருந்தாலும் வந்திருப்பேன். ஆனால், அந்த பண்பாடு… பக்குவமான அணுகுமுறை… இதுதான் என்னை வியக்க வைத்தது. அதனாலதான் அவர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்க்கையில் இருக்கிறார்.

ஒண்ணு சொல்லிக்கிறேன்… பண்பாடுள்ள மனிதனால் மட்டும்தான் நேர்வழில, மெயின் ரூட்ல போக முடியும். இல்லேன்னா பிளாட்பாரத்துல கூட நடக்க முடியாது. பைபாஸ்லதான் போயாகணும். அதாவது ஊருக்குள்ள நுழையவே முடியாது… ஊருக்கு வெளியே அப்படியே சுத்திக்கிட்டு கண்ணுக்கு மறைவா போயிட வேண்டியதுதான்.

இந்த மழை வெள்ள நேரத்துல, முதல்வருக்கு ஏராளமான மக்கள பிரச்சினை இருக்கும். வெள்ள சேதம் நிறைய இருக்கும், மக்கள் அவதிப் படற இந்த நேரத்துல, அதிகமா டைம் எடுத்துக்க விரும்பல.

என்னை வித்தியாசமாக காட்டியவர் டைரக்டர் சுரேஷ்கிருஷ்ணா. அண்ணாமலை படத்தில் ஒரு வித்தியாசமான ரஜினிகாந்தை காட்டினார். தொடர்ந்து பாட்ஷா, வீரா ஆகிய படங்களில் என்னை மாறுபட்ட கதாபாத்திரங்களில் காட்டினார்.

இந்த படத்தின் டிரைலர் பார்த்தேன். ஷங்கர் படங்கள் அளவுக்கு பிரமாண்டமாக இருந்தது. ஒரு நல்ல நடிகராக பா.விஜய்யை பார்த்தேன். இந்த வயதிலும் இளைஞர்களுக்கு வாலி பாட்டு எழுதுகிறார். அதேபோல் இந்த சின்ன வயதில் வாலி அளவுக்கு பாட்டு எழுதும் பா.விஜய்யை பாராட்டுகிறேன்.

எனக்கு நடிகர் நம்பியாரை ரொம்ப பிடிக்கும். அவர் எப்போதுமே சந்தோஷமாக இருப்பார். அவரிடம், உங்களுக்கு வயது என்ன ஆகிறது? என்று கேட்டேன். “என் உடம்புக்கு வயது 80. மனசுக்கு வயது 18” என்றார்.

அதேபோல் தான் கலைஞரும் இளைஞராக இருக்கிறார். கலைதான் அவரை இவ்வளவு சந்தோஷமாக, ஆரோக்கியமாக வைத்து இருக்கிறது. அவருடைய பேனாவுக்கு இன்னும் வயது ஆகவில்லை. இன்னும் அவர் நீண்டகாலம் வாழ்ந்து நாட்டுக்கும், கலைக்கும் சேவை செய்ய வேண்டும்,” என்றார் ரஜினி.

கை நிறையப் படங்களுடன் லட்சுமி ராய்!

முன்னணி நடிகையாக இல்லாவிட்டாலும் கூட கை நிறையப் படங்களுடன் பிசியாக காணப்படும் லட்சுமி ராய் திரையுலகினருக்கு பெரும் அதிசயமாக தோன்றுகிறார்.

லட்சுமி ராய் இதுவரை ஒரு ஸ்டார் என்ற அந்தஸ்தையே எட்டவில்லை. ஆனாலும் படு பிசியாக காணப்படுகிறார். தொடர்ந்து செய்திகளில் அடிபட்டவண்ணமிருக்கிறார்.

தமிழில் தற்போது அஜீத்துடன் மங்காத்தா, ராகவ லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா ஆகிய படங்களில் நடித்து வரும் லட்சுமி ராய்க்கு மலையாளத்தில் ஏகப்பட்ட படங்கள் கைவசம் இருக்கிறதாம்.

தற்போது மங்காத்தா படத்திற்காக பாங்காக்கில் முகாமிட்டுள்ளார் லட்சுமி ராய். அதை முடித்துக் கொண்டு திரும்பிய பின்னர் மலையாளப் படங்களில் நடிக்கப் போகிறார்.

மலையாளத்தில் கிறிஸ்டியன் பிரதர்ஸ், கேஸனோவா, யோதா 2 ஆகிய படங்களில் நடித்துத வருகிறார் லட்சுமி ராய்.

மங்காத்தா தவிர தமிழில் லட்சுமி ராய் நடித்து வரும் இன்னொரு படம் காஞ்சனா. முனி படத்தின் 2வது பாகமாக இது உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டார் அந்தஸ்து இல்லை, முக்கியத்துவம் வாய்ந்த நடிகையாகவும் இல்லை. ஆனாலும் படு பிசியான நடிகையாக லட்சுமி ராய் இருப்பது உண்மையிலேயே ஆச்சரியம்தான்.

 
Free Host | lasik surgery new york