Thursday, December 2, 2010

நடிகர் சங்கத்துக்கு ஆர்யா விளக்கம்!

தமிழ் மக்களின் ரசனையை நான் குறை கூறவில்லை என்று நடிகர் ஆர்யா நடிகர் சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக முன்னேறியிருப்பவர் ஆர்யா. இவரது பூர்வீகம் கேரளா.

சமீபத்தில் நடந்த துபாய் பட விழாவில் ஆர்யா பங்கேற்று பேசும்போது, தமிழ் நடிகர்களை இழிவுபடுத்தியதாக செய்திகள் வெளியாகின.

நான் ஒரு மலையாளி. ஆனால் மலையாளத்தில் நடிக்கும் அளவு திறமை இல்லை. தமிழ் படங்களில் நடிக்க திறமை தேவை இல்லை. நடிக்கவும் தெரிய வேண்டாம். ஆனால் மலையாள படங்களில் நடிப்பதற்கு நடிப்பு தெரிந்திருக்க வேண்டும். மலையாளத்தில்தான் தரமான படங்கள் வருகின்றன என்றெல்லாம் அவர் பேசியிருந்தார். இது தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது.

இதற்கு பெப்சி தலைவர் வி.சி. குகநாதன் கண்டனம் தெரிவித்தார். தமிழ், நடிகர்களை இழிவாக பேசிய ஆர்யாவை விரட்டியடிப்போம் என்றும், தமிழனை இழிவுபடுத்தினால் குரல்வளையைக் கடிப்போம் என்றும் எச்சரித்தார்.

இந்த விவகாரத்தில் திடீரென நடிகர் சங்கம் தலையிட்டது. ஆர்யாவை விமர்சித்த வி.சி. குகநாதனை சரத்குமார், ராதாரவி ஆகியோர் கண்டித்தனர். இதையடுத்து பெப்சிக்கும் நடிகர் சங்கத்துக்கும் மோதல் மூண்டது. பெப்சி நிர்வாகிகள் ராதா ரவியை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். இந்து மக்கள் கட்சியினரும் ஆர்யா உருவப் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க திரையுலகினரின் கூட்டுக்குழு கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், பெப்சி உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் இதில் கலந்து கொள்கின்றனர்.

இதற்கிடையில் நடிகர் சங்கத்துக்கு ஆர்யா விளக்க கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் தமிழ் நடிகர்களை இழிவாக பேசவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Free Host | lasik surgery new york