அப்பாவும் நடிகருமான விஜயகுமாருடன் இனி சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, என்று அவரது மகளும் நடிகையுமான வனிதா கூறினார்.
சென்னையை அடுத்த மதுரவாயல் போலீசில் தன்னை தாக்கியதாக மகள் வனிதா மற்றும் மருமகன் ஆனந்தராஜ் மீது நடிகர் விஜயகுமார் புகார் செய்தார். அதில், ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
இதே போல் தந்தை விஜயகுமார், சகோதரர் அருண்விஜய் ஆகியோர் மீது வனிதா தந்த புகாரில் மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில் நடிகர் விஜயகுமார், நடிகை வனிதா ஆகியோர் கொடுத்த புகார்கள் மீதான வழக்குகள் சென்னை புறநகர் மத்திய குற்றப் பிரிவுக்கு நேற்று மாற்றம் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று பகல் 12.50 மணிக்கு நடிகை வனிதா தனது கணவர் ஆனந்த்ராஜுடன் பரங்கிமலையில் உள்ள புறநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட்டிடம் தனது பிரச்சினைகளை விளக்கிக் கூறினார்.
பின்னர் பகல் 1.30 மணிக்கு கமிஷனர் அலுவலகத்தில் இருந்து கணவருடன் வெளியே வந்த வனிதா நிருபர்களிடம் கூறுகையில், “கடந்த 7-ந் தேதி எனது தந்தை மற்றும் குடும்பத்தினர் மீது தந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் எனது அப்பா 20-ந் தேதி தந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்தது ஏன்? என கேட்டேன். புறநகர் கமிஷனரிடம் பேசிய பின்னர் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. இதில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
என்னைப் பற்றி வதந்திகளை பரப்புகின்றனர். பைத்தியம், பொய் புகார் தருகிறார் என்று கூறுகின்றனர். எனது குழந்தை என்னிடம்தான் இருக்கும். ஆண்டவன் வந்தாலும் பிரிக்க முடியாது. இது விஜயகுமார்-வனிதா குடும்ப பிரச்சினை கிடையாது. அம்மாவிடம் இருந்து குழந்தையை பிரிக்க நினைக்கும் சமுக பிரச்சனை ஆகும்.
நாட்டில் தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை கிடைக்கும். நான் நியாயத்திற்காக போராடுகிறேன். நியாயம் கிடைக்கும் வரை எனது போராட்டம் தொடரும். அசிங்கப்படுத்திவிட்டு சமரசம் என கூறுவதா? சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
இந்த வழக்கில் முக்கிய கதாநாயகனான அருண்விஜயை தப்பவிட்டுள்ளனர். அருண்விஜய் அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார். அவரை வரவழைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2 வது கணவர் என்று எழுத வேண்டாம்!
ஆனந்தராஜ் எனது கணவர். அவரை 2-வது கணவர் என செய்திகளில் குறிப்பிட வேண்டாம். 7 திருமணம் செய்தவரை 7-வது கணவர் என்றா குறிப்பிடுவீர்கள்?,”என்றார்.
0 comments:
Post a Comment